தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் உள்ள தயக்கத்தை படித்தவர், படிக்காதவர் மத்தியில் எந்த வித்தியாசமும் இன்றி தாராளமாக காணமுடிகிறது.
தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் 10 மருத்துவர்களை நன்கு கேட்டு ஆலோசித்து முடிவு செய்யலாம். அதில் பாதிக்கு மேற்பட்டோர் வேண்டாம் எனும்பட்சத்தில், போட்டுக் கொள்ளாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ளலாம்..
ஆனால், வெறும் வாட்ஸ் அப் பார்வேர்டு தகவல்களை, அதுவும் ஆதாரமற்ற தகவல்களை நம்பி, தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளாமல் இருக்கும் மக்களை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
என் காதில் விழுந்தபடி, பலர் நடிகர் விவேக்கை உதாரணமாக்குகிறார்கள்... அவர்களின் வாட்ஸ் அப் பெட்டிக்குள் நயன்தாரா, ரஜினிகாந்த், ஸ்டாலின், கமல், எடப்பாடி பழனிசாமி, இன்னும் பிற பிரபலங்களின் தடுப்பூசி போட்டுக்கொண்ட செய்தி அவ்வளவு சீக்கிரம் சரியாக வந்துவிடவில்லை.
இங்கு கொரோனா உயிர்கொல்லியா தடுப்பூசி உயிர்கொல்லியா என்கிற வாதம் வேறு.
சரி தடுப்பூசிதான் போட்டுக்கொள்ள தயக்கம் என்றால், முககவசம் அணி, விலகி இரு, தனித்து இரு என்பதையாவது கடைபிடிக்க வேண்டும்.. அதையாவது கேட்கிறார்களா..?
இன்னமும் விழிப்புணர்வு வேண்டுமென்றால் பதாகைகள் போதாது.. பணத்தையும் கொடுத்தாக வேண்டும்... ரேசன் அட்டைக்கு நிவாரணம் கொடுப்பது போல், ஊசிக்கு ஊக்கமளிக்க தொகை கொடுத்தால்தான் தொற்றின் தாக்கம் கட்டுப்படும். அதனோடு நம்பிக்கையையும் விதைத்தாக வேண்டும்.
என் கிராமத்தில் என் சகோதரர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளதால், அவரின் ஏற்பாட்டில் தடுப்பூசி முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பொதுமக்கள் பங்கேற்றனர். ஆனால், இந்த முகாமில் ஊசி போட்டுக்கொண்டவர்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. நம் அருகில் உள்ளவர்கள் ஊசி போட்ட பின் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்கிற நம்பிக்கை வந்தால் தான், தயங்கியவர்கள் தடுப்பூசியை தேடி வருவர்.
கொரோனா தீவிர பிடியில் இருந்து தப்பிக்க, முகக்கவசம், தனிமனித இடைவெளி, சுத்தம் ஆகியவற்றோடு, தடுப்பூசி மட்டுமே தற்போதைக்கு உள்ள தீர்வு...