18.10.15

திரிஷா இல்லைன்னா நயன்தாரா

அண்மையில் திரிஷா இல்லைன்னா நயன்தாரா திரைப்படத்தினை பார்க்க நேர்ந்தது.

அது அப்படியே இருக்கட்டும்.

கீழ்காண்பதை முதலில் படித்து விட்டு தலைப்புக்கு வருவோம்.
திரைப்படங்கள் பொழுதுப்போக்கு என்று கூறப்பட்டாலும், மக்கள் அதனை வெறும் பொழுதுப்போக்காக மட்டும் நுகர்வதில்லை....
திரைப்படம் - ஓர் ஊடகம்
அது மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கண்ணாடி..
அங்கு காட்டப்படும் காட்சிகள் கற்பனைகளாக இருந்தாலும், கதையோட்டம் சிறிதேனும் நடைமுறை வாழ்வியலோடு ஒன்றிகிடக்கும் என்பதில் அய்யமில்லை.
சமகால வாழ்க்கைமுறைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்பட்டு போக திரைப்படங்கள் உதவுகின்றன.
செயல்பாடுகளில், பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் செய்ய, சீர்த்திருத்திக் கொள்ள, சரியானவற்றை அடையாளங்காண திரைப்படங்கள் உதவுகின்றன.
நாகரிக மாற்றங்களும், திரைப்படங்களோடு சம்பந்தப்பட்டுதான் இருக்கின்றன.
கதாபாத்திரங்களின் உடை, நடைகள் யதார்த்த மனிதர்களுக்கு தொற்றிக்கொள்கின்றன.
கற்பனைகள் காட்சியாக்கப்பட்டாலும், மீண்டும் அந்த காட்சி நிஜமாக்கப்படுகிறது என்பதும் மறுக்க இயலாது..
ஆக, இந்த காட்சி ஊடகத்தை கையாளும் கலைஞர்கள் சற்று நடப்பு சமூகவியலின் ஓட்டத்தை கருத்தில் கொண்டு காட்சிப்படுத்த வேண்டும்.
இப்போது நான் தலைப்பில் சொல்ல வந்ததை திரைப்படம் பார்த்தவர்கள் கண்டுபிடித்து இருப்பார்கள்.
இளையோர் காதல் வயப்படுவது, அது ஏற்கபடாமல் அல்லது முறிந்து போவது, மது பழக்கத்திற்கு ஆளாவது..
இதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கவே இருக்கின்றன.
இந்த திரைப்படத்தில் பதின்பருவ உணர்வுகளுக்கு தீனி போட்டு இருக்கிறார்கள்.
ஏதோவொரு வடிவில் உடலுறவுக்குள் காதலை அழைத்து செல்வதையே காணமுடிகிறது.
சமயத்தில் பெண்ணுடனான உறவை, குறிப்பாக பதின்பருவத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தி, இயல்பானதாகவே கொண்டு செல்கிறார்கள்.
வார்த்தைகளால் நிறைய ஆபாசம் பேசி இருக்கிறார்கள்..
அரங்கில் உள்ள இளைய கூட்டம் ஒலி எழுப்பி, தன் மனதில் உள்ளதை பிரதிபலிப்பதை கண்டு அங்கீகாரம் தேடிக்கொள்கிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் மேல் நம்முள் எழும் அச்சம்..
ஒரு பெண்ணை காதல் கொண்டு, திருமணம் வரை நீடிக்க, அவளுடன் உறவுகொள்வதை நியாயப்படுத்த முயற்சிக்கிறது இந்த திரைப்படம்..
அதே சமயம், ஓர் ஆணிடம் உறவு கொள்வதும், அவன் பிடிக்கவில்லை என்று உதறிவிட்டாலும், அந்த உறவு ஒரு பொருட்டல்ல என்பதையும் சொல்ல வருகிறது.
நாம் கற்பு என்பதையோ, கலாசாரம் என்பதையோ வலியுறுத்தவில்லை...
பாதையறியா பதின்பருவ உணர்வுகளுக்கு மடை கட்ட தவறும் ஊடகத்தை சீரமைக்க வேண்டும் என்பதுவே எண்ணம்.
மேற்குறிப்பிட்ட படம் வயதுவந்தோருக்கானது என்று சான்றிதழ் பெற்றாலும், குடும்பத்தோடு சிறார்களோடு வந்து படம் பார்த்து சென்றதை காண முடிந்தது திரையரங்கில்..
இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப எவ்வளவு காலம் ஆகிவிட போகிறது...

30.8.15

தலைநிமிர்வு கொண்டேன்..!


இரண்டரை ஆண்டு காலம் இருக்கும்...

தலைகுனிவு வாழ்க்கை..
பெரும்பாலும் பொது இடத்தில்
தனிமையில் இருந்தாலே தலைகுனிவு தான்...

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்பட்ட தொடர்பு...
காலத்தின் அவசியம், பணி நிமித்தம்...
தலைகுனிவு நிரந்தரமாகிவிட்டது...

ஜூலை 25, 2015 பகல் 1.30 மணி..
தலைகுனிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வரப்போவதை அந்த நொடி வரை அறிந்திருக்கவில்லை...

மாநகர பேருந்து வருகைக்காக காத்திருந்த அந்த பொழுதிலும்..
தொடர்பு நெருக்கமாகவே இருந்தது...

பேருந்து வந்தது..
முதல்படி ஏறும் அந்த கணமும் என் இதயத்தோடுதான் ஒன்றிகிடந்தது...

மூன்று படி ஏறி சமதளத்தில் நின்று
இதயத்தை தடவினேன்....

உறவு அற்றுப்போனது...
அல்ல அல்ல உறவு களவாடப்பட்டது.
தொடர்பு திருடப்பட்டது..

அப்போது தான் இதயத்தை வெகுநேரம் தொட்டப்படியே உணர்ந்துக்கொண்டேன்..
சென்னையில் திருடர்கள் இருப்பதை....

தலை நிமிர்ந்தது...
தலை நிமிர்வு என் சிந்தனைக்கு தீணிப்போட்டது...

அன்றைய நாளிலிருந்து..

பொது இடத்தில் தனிமையில் இருக்கும் போதெல்லாம்...
உலகை கவனித்தது என் கண்கள்..
மூளைக்குள் சிந்தனை, கற்பனை...
கவிதைகள்... அக்கறை கீற்றுகள்...
அசைபோட்டன எண்ணற்ற எண்ணங்கள்...

ஸ்மார்ட்டாக உணர்ந்தேன்...
ஸ்மார்ட்போன் தொலைத்த நிமிடத்தில் இருந்து...

ஸ்மார்ட்போன் தொலைந்ததாலோ, திருடப்பட்டதாலோ என் மனம் பதறவில்லை...
என் மனம் மீண்டது என்பதில் எனக்குள் திருப்தி...

இது எத்தனை காலம் என்பது தான்
எனக்குள் இன்னொரு கேள்வியும்...

ஆனாலும்...
தலைநிமிர்வுக்கொண்டேன்....

இது எத்தனை காலம் என்பது தான்
எனக்குள் மீண்டும் மீண்டும் கேள்வி...

அதுவரையிலும்...
தலைநிமிர்வுக்கொள்வேன்....

19.7.15

இணையமும் தமிழ் செய்தி ஊடகங்களும்

இணையதளம் இன்று பிரதான செய்தி ஊடகமாகி விட்டது.

இதற்காக தான் கூகுள் தனது முக்கிய திட்டப்பணிகளில் செய்தியாளர் மற்றும் செய்தி இணையதளங்களுக்காக தனி கவனம் செலுத்தி வருகிறது.

இதுமட்டுமல்லாது சமூக வலைதளங்களான முகநூல், டிவிட்டர், கூகுள்+ கூட செய்தி வழங்கும் முக்கிய தளமாகி விட்டன.

அதாவது, மேற்சொன்ன இணையதளங்களின் நோக்கம் தொடக்கத்தில் வேறு. ஆனால், இன்று அவற்றின் பிரதான நோக்கம் செய்தி .

உலகளவில் மிகப்பெரிய அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இணையதளங்களை தனது விளம்பரப்பலகையாக பயன்படுத்தாமல், பிரதான செய்தி வழங்கல் தளமாக்கி விட்டன.

இதில் கணிசமான வருவாயும் ஈட்டுகின்றன அந்த நிறுவனங்கள்.

இந்த தொழில்நுட்பத்தை ஆரம்பகாலத்தில் இருந்து நமது இந்திய ஊடகங்கள் நோட்டமிட்டுக்கொண்டே இருந்தன.

இதன் வரவு எங்கிருந்து வருவாயை பாதிக்குமோ என்ற அச்சத்தில் அச்சு மற்றும் காட்சி  ஊடகங்கள இருந்தன.

ஆனால், தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி, அனைவரின் கைகளில் செல்பேசியை கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல் இணைய பயன்பாட்டை அதிகரிக்க செய்தது..

இணையதளம் மூலம் சம்பாதிக்க முடியும் என்ற நிலை பிரகாசமானதும்... இணைய இதழ்கள் வரிசை கட்ட தொடங்கின...

இந்த பந்தயத்தில், அச்சும், காட்சியும் களமிறங்கின. .

என்ன... ஒரே போட்டாப்போட்டியாகியுள்ளது இணைய உலகில்...

ஆங்கிலத்தில் என்.டி.டி.வி., இந்தியா டைம்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இணையத்தில் முன்னணியில் உள்ளன.

சரியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள்,  தேவையான பல தகவல்களை பிரத்யேக குழுவுடன் வழங்குவதால் முன்னணியில் இருக்கின்றன...

இணையதளங்களுக்கென நிதி ஒதுக்க அஞ்சிய தமிழ் ஊடகங்கள் அதனை வெளி நிறுவனங்களின் பராமரிப்பில் வைத்திருந்ததால் முடங்கி கிடந்தன...

அதேசமயம், தமிழ் உள்ளிட்ட ஆங்கிலமல்லாத பிறமொழி பயன்பாடு கணினியில் குறைந்திருந்ததாலும், இந்த தொய்வு பத்தாண்டுகளுக்கு முன் இருந்தது.

அக்காலக்கட்டத்தில் வெப்உலகம் (தற்போது வெப்துனியா) உள்ளிட்ட தளங்கள் முன்னணியில் இருந்தன.

தமிழ் கணினி, இணையத்தமிழ் வளர்ச்சியால் நாளடைவில் தமிழர்கள் தமிழை இணையத்தில் நன்கு பயன்படுத்த தொடங்கினர். அவர்களுக்கு ஏதுவாக கருவிகள் உருவாகின.

அதே சமயம் இணையத்தின் எதிர்காலத்தை உணர்ந்துக்கொண்ட தினமலர் , தினகரன், தினமணி, தினத்தந்தி, மாலைமலர், நக்கீரன், ஆகிய நிறுவனங்கள் தங்களின் இணையதளத்தை மேம்படுத்தி செய்தி ஊடகமாக இணையத்தில் உலவின.

இதில் தற்போது முன்னணி இடத்தில் தினமலர், மாலைமலர், தினத்தந்தி, தினகரன், தினமணி உள்ளிட்ட செய்தித்தாள்கள் இருக்கின்றன.

குறிப்பாக தினமலர் தனது பிரத்யேக குழுவால், அன்றாட நிகழ்வுக்கு ஏற்றவாறு, வாசகர்களின் பிடித்த செய்திகளோடு வடிவமைப்பிலும், கொண்டு சேர்க்கும் தொழில்நுட்பத்திலும் முந்தி இருக்கின்றன. இத்தனைக்கும் சமூக வலைதளத்தில் தினமலர் அவ்வளவு செயல்பாட்டோடு இல்லாத போதே முதல்நிலையில் உள்ளது. 'பிராண்ட்' எனப்படும் நிறுவனத்தின் பெயர் மட்டுமே இதற்கு காரணமாகி விடாது.

சரி.

தமிழ் சூழலில் தொலைக்காட்சிகள் ஆரம்பத்தில் இணையத்தை கண்டு அஞ்சியது என்றால் அதனை மறுக்க இயலாது.

காரணம் தனது பார்வையாளரை தொலைக்காட்சி பெட்டிக்குள்ளேயே அடக்க முயன்றன.

பிரதான வணிக வாய்ப்பை தொலைக்காட்சிதான் என்றிருந்த இவர்களுக்கு, இணையத்தை விலக்கி வைத்திருருக்கவே தோன்றியது.

முதன்முறையாக தமிழன் தொலைக்காட்சி தனது செய்தித் தொகுப்பை இணையத்தில் கொடுக்க தொடங்கியது.

மற்ற நிறுவன செய்திகளை அல்லது முழு ஒளிபரப்பை பணம் செலுத்தி பார்க்கும் வசதி இருந்தாலும் அதனை நேரடியாக தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்யவில்லை.

தமிழன் தொலைக்காட்சி இணையதளம் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் தளமாக மாற்றமானது.

வெறும் அச்சு ஊடகம் மட்டுமே இணையதளத்திலும் செய்திகளை வழங்கி வந்த சூழலில், காட்சி ஊடகம் ஒன்று முதல்முறையாக களமிறங்கியது.

நாளடைவில் கூகுள் செய்திகள் என்ற பக்கத்தில் தமிழ் செய்தியில் தமிழன் தொலைக்காட்சியும் இடம்பெற்றது.

ஆக, காட்சி ஊடக வரலாற்றில் செய்திகளை இணையதளத்தில் வழங்கும் முதல் தொலைக்காட்சி என்ற இடத்தை பிடித்தது.

பின்னாளில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியதும், இணையதளத்தில் தொலைக்காட்சியை இலவசமாக வழங்கியது.

இதற்கான பார்வையாளர்கள் அதிகமானது..

இணையதளத்திலும் செய்திகளை உடனுக்குடன் வழங்கலானார்கள்...

அதிகமான வாசகர்கள் இல்லாவிட்டாலும், காட்சி ஊடகத்தை இணையத்திலும் பார்க்கும் சூழலை ஏற்படுத்தி கொடுத்தார்கள்...

நேரடியாக செய்திகளை பார்க்க வெளிநாடு வாழ் தமிழர்கள் நாட்டம் கொண்டார்கள்...

இவர்களும் அச்சு ஊடகத்தின் இணைய பணிப்போல்,  சமூக வலைதளங்களிலும்  , இணையதளத்திலும் செய்தி சேவை வழங்க பிரத்யேக குழுவுடன் களமிறங்கினர்.

அதேசமயம் தந்தி தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் தங்கள் நிறுவனம் சார்ந்த அச்சு ஊடகங்கள் இணையத்தில் கோலோச்சுவதால் காணொளி பதிவுகளுடன் மட்டுமே காட்சியளிக்கின்றன.

இந்த வரிசையில், நியூஸ்7தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய தோற்றத்தில் களமிறங்கி உளளது.. சமூக வலைதளத்தை தொலைக்காட்சிக்குள் காட்டி, இணையவாசிகளுக்கு அடுத்த களத்தை காட்டி வருகிறது.

விவாத நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சமூக வலைதள கருத்துகளை புதியதலைமுறை உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு செய்திக்கான சமூக வலைதள தாக்கத்தை பதிவு செய்து வருகிறது நியூஸ் 7 தமிழ்.

அமெரிக்காவில் கேபிள் எனப்படும் கம்பிவட தொலைக்காட்சி சேவை பெரும்பாலும் முடங்கி விட்டதாகவும், அங்குள்ள இளைஞர்கள் டிஜிட்டல் கருவிகளான கணினி, செல்பேசியிலேயே தொலைக்காட்சிகளை பார்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.



இந்த நிலை நம்ம ஊரில் நிகழ நாட்கள் தொலைவில் இல்லை... காரணம் இணையப் பயன்பாடு நம் நாட்டில் அதிகமாகியிருப்பதே.

இணையதொலைக்காட்சிகளும், யூடியூப் தொலைக்காட்சிகளும் பெருகி வருகின்றன. அதற்கான வணிக வருவாயும் கிடைப்பதால்... இணையம் அடுத்த தலைமுறைக்கான இலக்காகி விட்டது...

நீங்களும் முந்திக்கொள்ளுங்கள்.. இணையத்தில் இடம்பிடிக்க...

இங்கு ரியல் எஸ்டேட் தொல்லை இருக்காது... கட்டுமான கூலி வேண்டுமானால் ”கூட” இருக்கலாம்...

செய்தி இணையதளத்தின் நுனிப்புல் மேய்ச்சலாக தான் மேற்காண்பவை... இது குறித்த மேம்பட்ட தகவல்கள் விரைவில்...

மேலதிகம் படிக்க: thamizhthottam.zhakanini.com

13.7.15

ஆபாசத்தை தேடும் இளைஞர்கள்...

அறிவுத்தேடலில் இணையம் இன்றியமையா ஒன்றாகி விட்டது இன்றைய காலக்கட்டத்தில்...

இதில் மூழ்கி சின்னாபின்னமானவர்களும் உண்டு, மூழ்கி முத்து எடுத்தவர்களும் உண்டு.

சரி தத்துவங்களுக்கு அப்பால் சில உண்மைகளை உடைப்பதுவே இந்த பதிவின் நோக்கம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

என்னவென்றால், இணையம் என்றால் முக்கிய இடத்தில் இருப்பது “ஆபாசம்”.

இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பவர்களில் பலர் தன்னந்தனியே என்ன பார்ப்பார்கள் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை...

ஆனால் ஆபாச இணையதளமே, யாரெல்லாம் ஆபாசங்களை ரசிக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்துள்ளது.

அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

1980 களுக்கு பிறகு பிறந்தவர்களிடம் ( இன்றைய இளைஞர்கள் ) நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 24 விழுக்காடு பெண்களும், 76 விழுக்காடு ஆண்களும் ஆபாசங்களை பார்ப்பதாக தெரியவந்துள்ளது.

இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பெண்களின் அளவீடு வழக்கத்தை விட அதிகம் என்கிறது ஆய்வு.

அதாவது, முந்தைய தலைமுறையை விட (35+ வயதினர்) இந்த தலைமுறை இளைஞிகளில் ஆபாசத்தை ரசிப்பவர்கள் அதிகமாம்.

குறிப்பாக இரவு 11 மணிக்கு மேல் ஆபாசத்தை தேடும் இளைஞர்கள், சராசரியாக 9 நிமிடங்கள் ஆபாச இணையதளத்தை பார்ப்பதாக தெரிவிக்கிறது ஆய்வு.

ஸ்மார்ட்போன் காலம் என்பதால், ஆபாசங்களை பார்க்கும் இளைஞர்களில்  60 விழுக்காட்டினர் தங்களது ஸ்மார்ட் போனிலேயே பார்த்துவிடுவதாகவும் ஆய்வு தெளிவுப்படுத்துக்கிறது.

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆபாசம் பார்ப்போர் எண்ணிக்கை குறைவாம், திங்கட்கிழமை தான் எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கிறதாம்.

குறிப்பு: இது நம்ம ஊரில் நடத்தப்பட்டதல்ல... அமெரிக்காவின் குறிப்பிட்ட இணையதளம் தனது பார்வையாளர்களை நோட்டம் விட்டதில் கண்டறிந்தது.

9.7.15

குடிப்பவனிடம் அறிவுரை கூறுவது....

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

இதை நான் சொல்லலைங்க...

நம்ம வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுபவித்து எழுதி இருக்கிறார்...

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

கோயம்பேடு பேருந்து நிலையம்

ஊருக்கு பேருந்தும் கிடைக்கும்.. உறவுக்கு பெண்ணும் கிடைக்கும்...
வேறெங்குமில்லை, 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் சென்னையின் முக்கிய இடமான கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
தான்.
இங்கு வெளியூர் செல்வோர் கணிசமாக நடமாடுவது நாம் அறிவோம்...
ஆனால், இங்கேயே குடித்தனம் நடத்துவோரை அறிவோமா...?
சொந்த ஊர் செல்ல வாரந்தோறும் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று தான் பேருந்து பிடித்து செல்வேன்..
ஒவ்வொருமுறையும் புதுப்புது காட்சிகள் கண்களில் தென்படும்...
அதனை பட்டியலிட்டால் பக்கங்கள் நீளும்..
இருந்தாலும், இன்றைய காட்சிகளையாவது பட்டியலிட்டு விடுகிறேன்..
பேருந்து நிலையம் நுழைந்ததும் அகன்ற அரங்கம் நம்மை வரவேற்கும்.
இரவில் அங்கு பெருங்கூட்டம் படுத்து கிடக்கும்.. அதில் பாதி கடைசி பேருந்தை தவற விட்டதும், மீதி வீடே இதுவென வாழ்ந்து கிடப்பதுமாக இருக்கும்...
இங்கு அமர மட்டுமே அனுமதி . ஆனால், கூட்டம் மிகுதியானால் விதிகளுக்கும் ஓய்வு வழங்கப்படும்.
சில நேரம் அந்த அரங்கம் வெறிச்சோடி இருக்கும்.. சுற்றி பார்த்தால் சில காவல் தெய்வங்கள் கொம்புகளால் தரையை தட்டிக்கொண்டிருக்கும்.
ஆனாலும், மேற்சொன்ன காட்சி அப்படியே இருக்கும் வெறொரு அரங்கில்..
இருக்கவே இருக்கு மாநகர பேருந்து நிலையம்..
புல்வெளியிலும், நடைமேடையிலும் படுத்துக்கிடக்கும் காட்சிகள் என் புகைப்பட கருவியில் சிக்கிக்கொண்டது இன்று...

சரி. இது ஒரு காட்சி என்றால்...
மங்கிய வெளியில் மங்களகரமாக , முகத்தில் மாவும், தலையில் பூவும் சூடி ,
மயக்கும் உடையில், தயக்கம் இன்றி அழைக்கும் மங்கைகளும், திரு நங்கைகளும் வாடிக்கை இங்கு...
கழிவறைக்குள் சென்றால் அங்கேயே ஒரு உருவம் உலவிக்கொண்டிருக்கும்... சற்று பேச்சுக்கொடுத்தால் புக்கிங்கும் நடக்கும்...
நண்பர்களே..
சோற்றுக்கே திண்டாடுவோரும், வீடற்று கிடப்போரும், சென்னையில் இருப்பதை அன்றாடம் கண்டிராதோர் இல்லை.
காசுக்காக பகலில் பிச்சைகொள்வோரையும், இரவில் இச்சைக்கொள்வோரையும் அறிந்திடாதோர் இல்லை..
இதெல்லாம் மாற வேண்டும் என்றுதான் ஆசை...
முகநூலில் மாரடித்து என்ன பயன்?

8.7.15

வாழ்க தா(போ)லி !

தாலி என்பது இந்து சமயத்தை பின்பற்றுகிற பெண் ஒருவருக்கு, ஒருங்கே இல்லறம் ஏற்கும் ஆண் அணிவிக்கும் கயிறு என்பதை யாவரும் அறிவர்.
அது அண்மையில் கேலி கூத்தான கதை ஊரறிந்ததே..

சரி. விடயத்துக்கு வருகிறேன்.
சென்னை மாநகர பேருந்தில், பயணித்துக்கொண்டிருந்தேன்.
பின் இருக்கையில் இருந்ததால், முன்னோக்கி என் பார்வை இருப்பதும் இயல்பே...
சட்டென என் கண்ணில் பட்டது ஒரு இளம்பெண்ணின் தாலி...
அது அசாதாரணமாக முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது.
ஒரு வேளை சங்கிலி பறிப்புக்கு இலக்காகி, பின்னர் முயற்சி தோல்வியடைந்ததால் தப்பித்த தாலியோ எண்ணிக்கொண்டேன்...
இது நடந்து நாட்களானது...
அண்மையில் அதேபோல் காண நேர்ந்தது, வேறொரு சூழலில்...
பின்னர் தான் தெரிந்தது , பெரும்பாலான இளம்பெண்கள் தங்கள் தாலியை கழுத்தில் இருப்பதை அசிங்கமான அடையாளமாக கருதுவது...
அதை ஆடைக்குள் மறைத்துக்கொள்கிறார்கள்.
சில சமயம் அது வெளியே வந்து காட்டிக்கொடுத்துவிடுகிறது..
தெளிவான புரிதல் என்ன்வென்றால்..
பெண்கள் தாலியை விரும்புகிறார்களோ இல்லையோ...
அது வெறும் கயிறாக இல்லாமல், தங்கத்தால் ஆனதென்றால் சமூகத்தில் மற்றவர் முன் மதிப்பாக உணருகிறார்கள் என்பதை உணர முடிகிறது...
வாழ்க தா(போ)லி !

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...