நீ என்றால் அழகு
ஒத்துக்கொள்வாயா...
அலங்கரிக்காமல் பொதுவெளியில் தோன்ற உன் மனம் ஒத்துவராது என்பதை..
இடைசிறுத்து, முலைபருத்து
உன்னை செதுக்கிவிட்டார்கள்.
கோவில் சிலைகளில் மட்டுமல்ல
கேளிக்கை திரைகளில்....
சொல் பார்ப்போம்
நீ காமத்தில் அடங்காதவள் என்று.
மதிப்புக்கூட்டிய உன் இயல்புகள் ஆண்களுக்கான சந்தையில் ஏராளம்...
உற்றுப்பார் உன் ஆடைக்குள் எத்தனை தாராளம்..
உன்னை திரைவிலக்கி
இன்பத்துக்கு இரை தேடும்
என் இனத்தின் உச்சகட்ட வன்மத்தை
உள்ளபடியே நியாயப்படுத்துவது நியாயமல்ல.
உன்னை கொண்டாடும் இந்நாளில்
உனக்காக உரிமைக்குரல் எழுப்புவதும்
வாழ்த்து கூறுவதும் வாடிக்கையானது.
எது அழகு என்பதை
படம் காட்டும்
பகடித்தனத்தை தோலுரி
சமத்துவம் தேடும் உன் பயணத்தில்
ஆண் வேடம் அணியும் உன் அறியாமையை கழற்றியெறி
ஆண்மையில் அறிந்துக்கொள்
ஆளுமையில் அடையாளங்கொள்
சொற்பதங்களில் ஒன்றுமில்லை
கற்(பு)பிதங்களை வென்றெடு
பாலியல் விடுதலையல்ல உன் விடுதலை
சமூக கட்டமைப்பின் கட்டவிழ்ப்பே நமது எல்லை.
தோழி ! ஒன்றுகொள்.
நான் (ஆண்) உனக்கு எதிரியில்லை
நாமின்றி ஒன்றுமில்லை
இயற்கையின் நியதியை உணர்ந்திடு
பொருளாதாரம் சமநிலையானால்
நமக்கில்லை பாகுபாடு; அறிந்திடு
இதுதான் காலம்
இயங்குவோம் மாற்றங்களை நோக்கி
இணைந்திடு கைகளை உயர்த்தி...!
- வெ.யுவராஜ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக